துபாய்க்கு இலவச பயணிகள் விசா – முழு விபரம்
Share

48 hour free travel visa Dubai Tamil news midleeast
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வோருக்காக 48 மணி நேர இலவச பயண விசாவை அந்நாடு அனுமதித்துள்ளதால், இந்தியாவில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும். ஐக்கிய அமீரகத்திற்கு சுற்றுலா செல்பவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தங்கள் நாட்டுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்குச் செல்வதற்கு 48 மணி நேர இலவச பயண விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. அவசரத் தேவைக்காகவும், குறைந்தபட்ச செலவில் அமீரகம் செல்வோருக்கும் இந்த புதிய நடைமுறை பயனுள்ளதாக இருக்கும் என்று சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 48 மணி நேரம் தவிர மேலும் தங்குவதற்கு தேவைப்பட்டால் இந்திய மதிப்பில் 930 ரூபாய் செலுத்தி பயணி விசாவின் நேரத்தை மேலும் 96 மணி நேரமாக நீட்டித்துக் கொள்ளமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.